யூதர்கள் மீண்டும் நிலைநாட்டப்படக் கோரேஸ் ஆணையிடுதல்

கி.மு. 536

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எஸ்றா 1:1–4

1 எரேமியாவின் வாயினால் யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறுவதற்காக, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருடத்திலே, யெகோவா பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியைத் தூண்டியதாலே அவன்: 2 பரலோகத்தின் தேவனாகிய யெகோவா பூமியின் தேசங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்ட எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். 3 அவருடைய மக்கள் எல்லோரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனுடன் அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவானாக; எருசலேமில் வாசம்செய்கிற தேவனே தேவன். 4 அந்த மக்களில் மீதியாயிருக்கிறவன் எந்த இடத்தில் தங்கியிருக்கிறானோ, அந்த இடத்தின் மக்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாகக் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமல்லாமல், அவனுக்குப் பொன், வெள்ளி முதலிய பொருட்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து உதவி செய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் தேசமெங்கும் எழுதியனுப்பி அறிவிப்பு செய்தான்.

சங்கீதங்கள் 126

ஆரோகண பாடல்.

1 சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது,

கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

2 அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும்,

நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது;

அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்

என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

3 யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்;

இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம்.

4 யெகோவாவே,

தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல,

எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும்.

5 கண்ணீரோடு விதைக்கிறவர்கள்

கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.

6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்;

ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு

கெம்பீரத்தோடு திரும்பிவருவான்.

சங்கீதங்கள் 85

கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல்.

1 யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து,

யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.

2 உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து,

அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா)

3 உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு,

உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.

4 எங்கள் இரட்சிப்பின் தேவனே,

நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும்,

எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும்.

5 என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ?

தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கச்செய்வீரோ?

6 உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி

நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?

7 யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து,

உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.

8 கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்;

அவர் தம்முடைய மக்களுக்கும்

தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்;

அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாமலிருப்பார்களாக.

9 நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி,

அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.

10 கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும்,

நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.

11 சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும்,

நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும்.

12 யெகோவா நன்மையானதைத் தருவார்;

நம்முடைய தேசமும் தன்னுடைய பலனைக் கொடுக்கும்.

13 நீதி அவருக்கு முன்னாகச் சென்று,

அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.

2 நாளாகமம் 36:22–23

22 எரேமியாவின் வாயினாலே யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேற, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருடத்திலே யெகோவா பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியைத் தூண்டியதாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய யெகோவா பூமியின் தேசங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். 23 அவருடைய மக்கள் எல்லோரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் தேசமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்செய்தான்.