பாருக் சுருளை முதல்முறை வாசித்தல்
கி.மு. 606
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் அரசாட்சியின் நாலாம் வருடத்தில் யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்: 2 நீ ஒரு புத்தகச்சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களில் நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்வரை இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக்குறித்தும், எல்லா மக்களைக்குறித்தும் உன்னுடன் சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதில் எழுது. 3 யூதாவின் மக்கள், அவரவர் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்புவதற்காகவும், தங்கள் அக்கிரமத்தையும் தங்கள் பாவத்தையும் நான் மன்னிப்பதற்காகவும், தங்களுக்கு நான் செய்ய நினைத்திருக்கிற தீங்குகளைக்குறித்து ஒருவேளை அவர்கள் கேட்பார்கள் என்றார். 4 அப்பொழுது எரேமியா நேரியாவின் மகனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் யெகோவா எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புத்தகச்சுருளில் எழுதினான். 5 பின்பு எரேமியா பாருக்கை நோக்கி: நான் அடைக்கப்பட்டவன்; நான் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையக்கூடாது. 6 நீ உள்ளே நுழைந்து, என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள யெகோவாவுடைய வார்த்தைகளைக் யெகோவாவுடைய ஆலயத்தில் உபவாச நாளில் மக்களுடைய காதுகள் கேட்க வாசிப்பதுமின்றி, தங்கள் பட்டணங்களிலிருந்துவருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்குமளவுக்கு அவைகளை வாசிப்பாயாக. 7 ஒருவேளை அவர்கள் யெகோவாவுடைய முகத்திற்கு முன்பாகப் பணிந்து விண்ணப்பம்செய்து, அவரவர் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்புவார்கள்; யெகோவா இந்த மக்களுக்கு விரோதமாகச் சொல்லியிருக்கிற கோபமும் உக்கிரமும் பெரியது என்று சொன்னான். 8 அப்படியே நேரியாவின் மகனாகிய பாருக்கு அந்தப் புத்தகத்தில், யெகோவாவுடைய ஆலயத்தில் யெகோவாவுடைய வார்த்தைகளை வாசிப்பதற்கு எரேமியா தீர்க்கதரிசி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.
சுருளை வாசித்த பிறகு பாருக் ஆறுதலடைகிறார்
1 யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் அரசாட்சியின் நான்காம் வருடத்தில் நேரியாவின் மகனாகிய பாருக் இந்த வசனங்களை எரேமியாவின் வாய் சொல்ல ஒரு புத்தகத்தில் எழுதும்போது, எரேமியா தீர்க்கதரிசி அவனிடத்தில் பேசி, 2 பாருக்கே, உன்னைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், 3 நீ: இப்பொழுது எனக்கு ஐயோ, யெகோவா என் வியாதியை சஞ்சலத்தால் பெருகச்செய்தார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதேபோனேன் என்று சொன்னாய் என்கிறார். 4 இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழு தேசத்திற்கும் இப்படியே நடக்கும். 5 நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ, மாம்சமான அனைவர்மேலும் தீங்கை வரச்செய்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்; ஆனாலும், நீ போகும் எல்லா இடங்களிலும் உன் உயிரை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று அவனுடன் சொல் என்றார்.
சிறையிருப்பு தொடங்குகிறது
1 அவனுடைய நாட்களிலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருடங்கள் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்செய்தான்.
6 அவனுக்கு விரோதமாக பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலிகளால் அவனைக் கட்டினான். 7 யெகோவாவுடைய ஆலயத்தின் தட்டுமுட்டுகளிலும் சிலவற்றை நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவைகளை பாபிலோனிலுள்ள தன்னுடைய கோவிலிலே வைத்தான்.
1 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் ஆட்சிசெய்த மூன்றாம் வருடத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்து, அதை முற்றுகையிட்டான். 2 அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவனுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தெய்வத்தின் கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தெய்வத்தின் கருவூலத்திற்குள் வைத்தான். 3 அப்பொழுது இஸ்ரவேல் மக்களுக்குள்ளே ராஜவம்சத்தார்களிலும் உயர்குடிமக்களிலும் எந்தவொரு குறைபாடும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணர்களும், ராஜாவின் அரண்மனையிலே வேலைசெய்யத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபர்களைக் கொண்டுவரவும், 4 அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் மொழியையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் அதிகாரிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்கு கட்டளையிட்டான். 5 ராஜா, தான் சாப்பிடும் உணவிலேயும் தான் குடிக்கும் திராட்சைரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருடங்கள் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவிற்கு முன்பாக நிற்கும்படிசெய்யவும் கட்டளையிட்டான். 6 அவர்களுக்குள் யூதா மக்களாகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். 7 அதிகாரிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவிற்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவிற்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.
3 மனாசே தன் எல்லாச் செய்கைகளினாலும் செய்த பாவங்களினிமித்தம் யூதாவைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றும்படி யெகோவாவுடைய கட்டளையினால் அப்படி நடந்தது. 4 அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் யெகோவா மன்னிக்க விருப்பமில்லாதிருந்தார்.