பகுதி 3: ஆசாவின் ஆட்சி

யூதாவின் ராஜ்யம்

தேவன்மீது ஆசாவின் பக்தி

கி.மு. 955

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 நாளாகமம் 14:1

1 அபியா இறந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருடங்கள்வரை அமைதலாயிருந்தது.

1 இராஜாக்கள் 15:9–11

9 இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் 20 ஆம் வருடத்திலே ஆசா யூதா தேசத்திற்கு ராஜாவாகி, 10 41 வருடங்கள் எருசலேமில் அரசாட்சி செய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள். 11 ஆசா தன்னுடைய தகப்பனாகிய தாவீதைப்போல் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

2 நாளாகமம் 14:2–3

2 ஆசா தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான். 3 அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி,

1 இராஜாக்கள் 15:12–15

12 அவன் ஆண் விபசாரக்காரர்களை தேசத்திலிருந்து அகற்றி, தன்னுடைய முன்னோர்கள் ஏற்படுத்தின அருவருப்பான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி, 13 தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை ஏற்படுத்தின தன்னுடைய தாயாகிய மாகாளையும் ராணியாக இல்லாதபடி விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா அழித்து, கீதரோன் ஆற்றின் அருகில் சுட்டெரித்துப்போட்டான். 14 மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடு இருந்த நாட்களெல்லாம் அவனுடைய இருதயம் யெகோவாவோடு இணைந்திருந்தது. 15 தன்னுடைய தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிப்பொருட்களையும் அவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்தான்.

2 நாளாகமம் 14:4–15

4 தங்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்றுக்கொடுத்து, 5 யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்ஜியம் அமைதலாயிருந்தது. 6 யெகோவா அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதால், அந்த வருடங்களில் அவனுக்கு விரோதமான போர் இல்லாமலிருந்தது; தேசம் அமைதலாயிருந்ததால் யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான். 7 அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமைதலாயிருக்கும்போது, நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு கோட்டைச் சுவர்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டாக்கி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய யெகோவாவை தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது. 8 யூதாவிலே கேடகத்தையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதாயிரம்பேருமான படை ஆசாவுக்கு இருந்தது, இவர்களெல்லோரும் பலசாலிகள். 9 அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர் சேர்ந்த படையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேஷாவரை வந்தான். 10 அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேஷாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் போருக்கு அணிவகுத்து நின்றார்கள். 11 ஆசா தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: யெகோவாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலமில்லாதவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய யெகோவாவே, எங்களுக்குத் துணையாக நில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; யெகோவாவே, நீர் எங்கள் தேவன்; மனிதன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான். 12 அப்பொழுது யெகோவா அந்த எத்தியோப்பியர்களை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாகத் தோற்கடித்ததால் எத்தியோப்பியர்கள் ஓடிப்போனார்கள். 13 அவர்களை ஆசாவும் அவனோடிருந்த மக்களும் கேரார்வரை துரத்தினார்கள்; எத்தியோப்பியர்கள் திரும்ப பலங்கொள்ளாதபடிக்கு முற்றிலும் அழிக்கப்பட்டார்கள்; யெகோவாவுக்கும் அவருடைய படைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளையடித்து, 14 கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் தோற்கடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டானது; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாக அகப்பட்டது. 15 மிருகஜீவன்கள் இருந்த கொட்டகைகளையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் ஓட்டிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

ஆசா தேவனுடன் உடன்படிக்கை செய்கிறான்

2 நாளாகமம் 15:1–15

1 அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் மகனாகிய அசரியாவின்மேல் இறங்கினதால், 2 அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனிதரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடு இருந்தால், அவர் உங்களோடு இருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை நீங்கள் விட்டுவிட்டால், அவர் உங்களை விட்டுவிடுவார். 3 இஸ்ரவேலிலே அநேக நாட்களாக உண்மையான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை. 4 தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார். 5 அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிமக்கள் எல்லோருக்குள்ளும் பெரும் குழப்பம் உண்டாயிருந்து, 6 தேசம் தேசத்தையும், பட்டணம் பட்டணத்தையும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித துன்பத்தினாலும் கலங்கச்செய்தார். 7 நீங்களோ உங்கள் கைகளைத் தளரவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் செயல்களுக்குப் பலன் உண்டு என்றான். 8 ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் தைரியம் கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்து அகற்றி, யெகோவாவுடைய மண்டபத்தின் முன்னிருந்த யெகோவாவுடைய பலிபீடத்தைப் புதுப்பித்து, 9 அவன் யூதா பென்யமீன் மக்களையும், அவர்களோடுகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலுமிருந்து வந்து அவர்களோடு வசித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடு இருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான மக்கள் அவனுடன் சேர்ந்தார்கள். 10 ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருடம் மூன்றாம் மாதத்திலே அவர்கள் எருசலேமிலே கூடி, 11 தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டு வந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் யெகோவாவுக்கு பலியிட்டு, 12 தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்; 13 சிறியோர் பெரியோர் ஆண் பெண் எல்லோரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்ற ஒரு உடன்படிக்கை செய்து, 14 மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் யெகோவாவுக்கு முன்பாக ஆணையிட்டார்கள். 15 இந்த ஆணைக்காக யூதா மக்கள் அனைவரும் சந்தோஷப்பட்டார்கள்; தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; யெகோவா அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரிடமிருந்து போர் எதுவும் இல்லாமல் அவர்களை இளைப்பாறச்செய்தார்.

2 நாளாகமம் 15:18–19

18 தன் தகப்பனும் தானும் பரிசுத்தம்செய்ய பொருத்தனை செய்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான். 19 ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருடம்வரை போர் இல்லாதிருந்தது.