எருசலேமின் அழிவுக்கு ஓர் அறிமுகம்

ஆலயமும் எருசலேமும் அழிக்கப்பட்டதைப் பற்றிய பதிவுக்கு ஒரு பொதுவான அறிமுகம்.

கி.மு. 595

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 நாளாகமம் 36:11–21

11 சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினோரு வருடங்கள் எருசலேமில் அரசாண்டு, 12 தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் யெகோவாவுடைய வார்த்தையைக் கூறிய எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை. 13 தேவன்மேல் தன்னை ஆணையிடச் செய்த நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்செய்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பாமல், தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான். 14 ஆசாரியர்களில் முக்கியமான அனைவரும் மற்றும் மக்களும் கூடி புறவகைகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்செய்து, யெகோவா எருசலேமிலே பரிசுத்தம்செய்த அவருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.

15 அவர்களுடைய முன்னோர்களின் தேவனாகிய யெகோவா தமது மக்களையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கு இரக்கமுள்ளவராக இருந்ததால், அவர்களிடத்திற்குத் தம்முடைய பிரதிநிதிகளை ஏற்கனவே அனுப்பினார். 16 ஆனாலும் அவர்கள் தேவனுடைய பிரதிநிதிகளைக் கேலிசெய்து, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை அவமதித்ததால், யெகோவாவுடைய கடுங்கோபம் அவருடைய மக்களின்மேல் வந்தது; உதவி இல்லாமல் போனது. 17 ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரச்செய்தார்; அவன் அவர்களுடைய வாலிபர்களை அவர்களின் பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தால் கொன்று, வாலிபர்களையும் கன்னிப்பெண்களையும் முதியோர்களையும் நரைமுடி உள்ளவர்களையும் விட்டுவிடவில்லை; எல்லோரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். 18 அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான தட்டுமுட்டுகள் அனைத்தையும், யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். 19 அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் மதிலை இடித்து, அதன் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த அழகான பொருட்களையெல்லாம் அழித்தார்கள். 20 பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா அரசாட்சி ஏற்படுத்தப்படும்வரை அங்கே அவர்கள் அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் அடிமைகளாக இருந்தார்கள். 21 யெகோவா எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறுவதற்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருடங்களை மனநிறைவுடன் அனுபவித்து முடியும்வரை, அது பாழாகிக்கிடந்த நாட்களெல்லாம் அதாவது எழுபது வருடங்கள் முடியும்வரை ஓய்ந்திருந்தது.

2 இராஜாக்கள் 25:1–2

1 அவன் அரசாட்சிசெய்யும் ஒன்பதாம் வருடம் பத்தாம்மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அவனுடைய எல்லா படைகளோடு எருசலேமுக்கு விரோதமாக வந்து, அதற்கு எதிரே முகாமிட்டு, சுற்றிலும் அதற்கு எதிராக முற்றுகைச் சுவர்களைக் கட்டினான். 2 அப்படியே ராஜாவாகிய சிதேக்கியாவின் பதினோராம் வருட ஆட்சி வரை நகரம் முற்றுகையிடப்பட்டிருந்தது.

கல்தேயர் நெருங்குதல்; எபிரெய அடிமைகள் விடுவிக்கப்படுதல் கி.மு. 590

கல்தேயரின் படை நெருங்குகிறது. சிதேக்கியாவும் நகரமும் பிடிக்கப்படுவது முன்னறிவிக்கப்படுகிறது. எபிரெய அடிமைகள் விடுவிக்கப்படுகிறார்கள்.

எரேமியா 39:1

1 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருடம் பத்தாம் மாதத்தில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாக வந்து, அதை முற்றுகைபோட்டார்கள்.

எரேமியா 37:1–4

1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாதேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய மகனாகிய கோனியாவின் பட்டத்திற்கு யோசியாவின் மகனாகிய சிதேக்கியா வந்து ஆட்சிசெய்தான். 2 யெகோவா எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் மக்களாகிலும் கேட்கவில்லை. 3 சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் மகனாகிய யூகாலையும், மாசெயாவின் மகனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம் செய்யவேண்டும் என்று சொல்லச் சொன்னான். 4 அப்பொழுது எரேமியா மக்களின் நடுவே போக்கும் வரத்துமாக இருந்தான்; அவனை அவர்கள் காவல் வீட்டில் இன்னும் போடவில்லை.

எரேமியா 34:1–10

1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய சர்வசேனையும், அவன் ஆளுகைக்குட்பட்ட பூமியின் எல்லா ராஜ்ஜியங்களும், எல்லா மக்களும் எருசலேமுக்கும் அதைச் சேர்ந்த எல்லா பட்டணங்களுக்கும் விரோதமாகப் போர் செய்யும்போது எரேமியாவுக்குக் யெகோவாவால் உண்டான வார்த்தை: 2 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை நெருப்பினால் சுட்டெரிப்பான். 3 நீ அவன் கைக்குத் தப்பிப்போகாமல், நிச்சயமாய்ப் பிடிபட்டு, அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய்; உன் கண்கள் பாபிலோன் ராஜாவின் கண்களைக் காணும்; அவன் வாய் உன் வாயுடன் பேசும்; நீ பாபிலோனுக்குப் போவாய் என்று யெகோவா சொல்லுகிறார். 4 ஆனாலும் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேள்; உன்னைக் குறித்துக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீ பட்டயத்தால் இறப்பதில்லை. 5 சமாதானத்துடன் இறப்பாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் முற்பிதாக்களுக்காக கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உனக்காகவும் கொளுத்தி, ஐயோ, ஆண்டவனே என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று யெகோவா சொன்னார் என்று சொல் என்றார். 6 இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான். 7 அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும், யூதாவின் எல்லாப் பட்டணங்களிலும் மீதியான பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் போர் செய்துகொண்டிருந்தது; யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களில் இவைகளே தப்பியிருந்தவைகள்.

8 ஒருவனும் யூத மக்களாகிய தன் சகோதரனை அடிமைப்படுத்தாமல், அவனவன் எபிரெயனாகிய தன் வேலைக்காரனையும், எபிரெயப் பெண்ணாகிய தன் வேலைக்காரியையும் சுதந்திரமாக அனுப்பிவிடவேண்டுமென்று அவர்களுக்கு விடுதலையைச் சொல்ல, 9 ராஜாவாகிய சிதேக்கியா எருசலேமில் இருக்கிற எல்லா மக்களுடன் உடன்படிக்கை செய்தபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் வார்த்தை உண்டானது. 10 ஒவ்வொருவனும் தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் இனி அடிமைப்படுத்தாமல், சுதந்தரவாளியாக அனுப்பிவிடவேண்டுமென்று உடன்படிக்கைக்கு உட்பட்ட எல்லாப் பிரபுக்களும் எல்லா மக்களும் கேட்டபோது, அதன்படி அவர்களை அனுப்பிவிட்டார்கள்.