பகுதி 4: யோவான் மற்றும் இயேசுவின் பிறப்பும் சிறுவயதும் கி.மு. 7 முதல் கி.பி. 7 வரை

யோவான்ஸ்நானன் மற்றும் இயேசுவின் பிறப்பும் சிறுவயதும்.

அநேகமாக கி.மு. 7 முதல் கி.பி. 7 வரை

இந்தப் பகுதிகள் யோவான், இயேசு இருவரின் பிறப்பைப் பற்றிய அறிவிப்புகளையும், அவர்களது பிறப்பு, மழலைப்பருவம், சிறுவயது ஆகியவற்றையும் உள்ளடக்குகின்றன.

ஒரு தேவதூதன் யோவானின் பிறப்பைப் பற்றிச் சகரியாவிடம் தெரிவிக்கிறார்

ஒரு தேவதூதன் யோவான்ஸ்நானனின் பிறப்பைச் சகரியாவுக்கு அறிவிக்கிறார்.

எருசலேம், தேவாலயத்தில். அநேகமாக கி.மு. 7

கி.மு. 7

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

லூக்கா 1:5–25

1:5 யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்த சகரியா என்னும் பெயர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி ஆரோனுடைய சந்ததியில் ஒருத்தி, அவளுடைய பெயர் எலிசபெத்து. 6 அவர்கள் இருவரும் கர்த்தர் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாக நடந்து, தேவனுக்குமுன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள். 7 எலிசபெத்து மலடியாக இருந்தபடியால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் முதிர்வயதானவர்களாகவும் இருந்தார்கள். 8 அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய முறைமைகளின்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், 9 ஆசாரிய ஊழிய முறைகளின்படி அவன் தேவாலயத்திற்குச் சென்று தூபம் காட்டுகிறதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். 10 தூபம் காட்டுகிற நேரத்திலே மக்களெல்லோரும் கூட்டமாக வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். 11 அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான். 12 சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான். 13 கர்த்தருடைய தூதன் அவனைப் பார்த்து: சகரியாவே, பயப்படாதே, உன் விண்ணப்பம் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவனுக்கு யோவான் என்று பெயர் இடுவாயாக. 14 உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள். 15 அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான். 16 அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். 17 பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான மக்களை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்த, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உள்ளவனாக கர்த்தருக்கு முன்னே நடப்பான் என்றான். 18 அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எப்படி அறிவேன்; நான் முதிர்வயதானவனாக இருக்கிறேன், என் மனைவியும் வயதானவளாக இருக்கிறாளே என்றான். 19 தேவதூதன் அவனுக்கு மறுமொழியாக: நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்; 20 இதோ, குறித்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசிக்காதபடியால் இவைகள் நிறைவேறும் நாள்வரை நீ பேசமுடியாமல் ஊமையாக இருப்பாய் என்றான். 21 மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள். 22 அவன் வெளியே வந்தபோது மக்களிடத்தில் பேச முடியாமலிருந்தான்; எனவே தேவாலயத்தில் அவன் ஒரு தரிசனத்தைப் பார்த்தான் என்று அறிந்துகொண்டார்கள். அவன் ஊமையாக இருந்தபடியால் அவர்களுக்கு சைகைகாட்டினான். 23 அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டிற்குப்போனான். 24 அதற்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பந்தரித்து: மக்கள் மத்தியில் எனக்கு உண்டாயிருந்த அவமானத்தை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் இரக்கம் வைத்து, 25 எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள்.

ஒரு தேவதூதன் இயேசுவின் பிறப்பைப் பற்றிக் கன்னி மரியாளிடம் தெரிவிக்கிறார் கி.மு. 7 அல்லது 6

நாசரேத்து. அநேகமாக கி.மு. 7 அல்லது 6

லூக்கா 1:26–38

1:26 எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில், 27 தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள். 28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். 29 அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். 30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய். 31 இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. 32 அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். 33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். 34 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள். 35 தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும். 36 இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம். 37 தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான். 38 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான்.

மரியாள் சந்திக்க வரும்போது எலிசபெத்து அவருக்குப் பாடுகிறார்

யூதேயாவின் மலைநாடு

லூக்கா 1:39–45

1:39 அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய், 40 சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள். 41 எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, 42 அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. 43 என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்! 44 இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது. 45 விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.