ஒரு தேவதூதன் இயேசுவின் பிறப்பைப் பற்றி யோசேப்பிடம் தெரிவிக்கிறார்

நாசரேத்து

கி.மு. 7 அல்லது 6

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 1:18–25

1:18 இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் விபரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்கள் இணைவதற்குமுன்பே, அவள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 19 அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாக இருந்து, அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல், இரகசியமாக அவளை விவாகரத்துசெய்ய யோசனையாக இருந்தான். 20 அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்போது, கர்த்தருடைய தூதன் கனவில் அவனுக்குக் காணப்பட்டு: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே; அவளிடத்தில் கருவுற்றிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது. 21 அவள் ஒரு மகனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனென்றால், அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான். 22 தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 23 அவன்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்” என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம். 24 யோசேப்பு தூக்கம் தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; 25 அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.

இயேசுவின் பிறப்பு கி.மு. 6 அல்லது 5

பெத்லகேம். அநேகமாக கி.மு. 6 அல்லது 5

லூக்கா 2:1–7

2:1 அந்த நாட்களில் ரோம அரசாட்சிக்குட்பட்ட நாடெங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எழுதப்படவேண்டும் என்று அகஸ்துராயனால் கட்டளையிடப்பட்டது. 2 சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசத்தின் அதிபதியாக இருந்தபோது இந்த முதலாம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. 3 எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவுசெய்ய எல்லோரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்குப் போனார்கள். 4 அப்பொழுது யோசேப்பு, தான் தாவீதின் வம்சத்தை சேர்ந்தவனாக இருந்தபடியால், பதிவு செய்வதற்காக, தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்ட கர்ப்பமாக இருந்த மரியாளைக் கூட்டிக்கொண்டு, 5 கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் இருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். 6 அங்கே அவர்கள் இருக்கும்போது, மரியாளுக்குப் பிரசவநேரம் வந்தது. 7 அவள் தன் தலைப்பிள்ளையான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, சத்திரத்திலே அவர்களுக்கு இடம் இல்லாததினால், குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்தாள்.

தேவதூதர்கள் துதிக்கிறார்கள், மேய்ப்பர்கள் வணக்கம் செலுத்துகிறார்கள்

பெத்லகேமுக்கு அருகில்

லூக்கா 2:8–20

2:8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே அவர்களுடைய ஆட்டுமந்தையைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். 9 அந்த நேரத்திலே கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்துநின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். 10 தேவதூதன் அவர்களைப் பார்த்து: பயப்படாமலிருங்கள்; இதோ, எல்லா மக்களுக்கும் மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். 11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். 12 குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்திருப்பதைப் பார்ப்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். 13 உடனே பரலோக தூதர்சேனையின் கூட்டம் தோன்றி, அந்தத் தூதனோடு சேர்ந்து:

14 “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும்,

பூமியிலே சமாதானமும், மனிதர்கள்மேல் பிரியமும் உண்டாவதாக” என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.

15 தேவதூதர்கள் அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் பார்த்து: நாம் பெத்லகேம் ஊருக்குப்போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு சொல்லப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, 16 வேகமாக வந்து, மரியாளையும் யோசேப்பையும், கால்நடைத் தீவனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த குழந்தையையும் பார்த்தார்கள். 17 பார்த்து, அந்தக் குழந்தையைப்பற்றி அவர்களுக்குச் சொல்லப்பட்ட விஷயங்களை எல்லா மக்களுக்கும் சொன்னார்கள். 18 மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட அனைவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். 19 மரியாளோ அந்தக் காரியங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள். 20 மேய்ப்பர்களும் தங்களுக்கு தூதர்களால் சொல்லப்பட்டதையும், சொல்லப்பட்டவைகள் எல்லாம் அப்படியே நடந்ததையும் பார்த்து தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.

இயேசுவின் விருத்தசேதனம்

பெத்லகேம்

லூக்கா 2:21

2:21 குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாவது நாளிலே, அது கர்ப்பத்தில் உருவாவதற்கு முன்பே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, குழந்தைக்கு இயேசு என்று பெயர் வைத்தார்கள்.