பகுதி 9: அமத்சியாவின் ஆட்சி

யூதாவின் ராஜ்யம்

அமத்சியா தன் தந்தையைக் கொன்றவர்களைத் தண்டிக்கிறார்

கி.மு. 838

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

2 இராஜாக்கள் 14:1–6

1 இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் மகனாகிய யோவாசுடைய இரண்டாம் வருட ஆட்சியில் யூதாவின் ராஜாவாகிய யோவாசின் மகன் அமத்சியா ராஜாவானான். 2 அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருடங்கள் அரசாட்சி செய்தான்; எருசலேம் நகரத்தைச் சேர்ந்த அவனுடைய தாயின் பெயர் யொவதானாள். 3 அவன் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் அல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான். 4 மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; மக்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபம்காட்டி வந்தார்கள். 5 அரசாட்சி அவன் கையிலே உறுதிப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் வேலைக்காரர்களைக் கொன்றுபோட்டான். 6 ஆனாலும் பிள்ளைகளினாலே தகப்பன்களும், தகப்பன்களினாலே பிள்ளைகளும் கொலை செய்யப்படாமலும், அவனவன் செய்த பாவத்தினாலே அவனவன் கொலை செய்யப்படவேண்டும் என்று மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, யெகோவா கட்டளையிட்ட பிரகாரம் கொலைசெய்தவர்களின் பிள்ளைகளை அவன் கொல்லவில்லை.

ஏதோமுடன் அமத்சியாவின் போர் கி.மு. 827

2 நாளாகமம் 25:5–11

5 அமத்சியா யூதா மனிதரைக் கூடிவரச் செய்து, அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே, யூதா, பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும், நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபதுவயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை எண்ணிப்பார்த்து, போருக்குப் புறப்படவும், ஈட்டியையும் கேடகத்தையும் பிடிக்கத்தகுதியான போர்வீரர்கள் மூன்றுலட்சம்பேர் என்று கண்டான். 6 இஸ்ரவேலிலும் ஒருலட்சம் பராக்கிரமசாலிகளை நூறு தாலந்து வெள்ளி கொடுத்து கூலிக்கு அமர்த்தினான். 7 தேவனுடைய மனிதன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் படை உம்முடனே வரக்கூடாது; யெகோவா எப்பிராயீமின் எல்லா மகன்களாகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை. 8 போக விரும்பினால் நீர் போகலாம், காரியத்தை நடத்தும்; போருக்குத் தைரியமாக நில்லும்; தேவன் உம்மை எதிரிக்கு முன்பாக விழச்செய்வார்; உதவி செய்யவும் விழச்செய்யவும் தேவனாலே முடியும் என்றான். 9 அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் படைக்குக் கொடுத்த நூறு தாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனிதனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனிதன்: அதைப்பார்க்கிலும் அதிகமாகக் யெகோவா உமக்குக் கொடுக்கமுடியும் என்றான். 10 அப்பொழுது அமத்சியா எப்பிராயீமரில் தன்னிடத்திற்கு வந்த படையைத் தங்கள் வீட்டிற்குப் போய்விடப் பிரித்துவிட்டான்; அதனால் அவர்களுக்கு யூதாவின்மேல் மிகுந்த கோபம் உண்டாகி, கடுமையான எரிச்சலோடு தங்களிடத்திற்குத் திரும்பிப்போனார்கள். 11 அமத்சியாவோ தைரியமாக, தன் மக்களைக் கூட்டி, உப்புப்பள்ளத்தாக்குக்குப் போய், சேயீர் புத்திரரில் பத்தாயிரம்பேரை வெட்டினான்.

2 இராஜாக்கள் 14:7

7 அவன் உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியர்களில் பத்தாயிரம்பேரைக் கொன்று, போர்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பெயர் வைத்தான்.

2 நாளாகமம் 25:12–16

12 யூதா மக்கள், பத்தாயிரம்பேரை உயிரோடு பிடித்து, ஒரு கன்மலையின் உச்சியிலே கொண்டுபோய், அவர்களெல்லோரும் நொறுங்கிப்போகத்தக்கதாக அந்தக் கன்மலையின் உச்சியிலிருந்து கீழேத் தள்ளிவிட்டார்கள். 13 தன்னோடுகூட போருக்கு வராமலிருக்க, அமத்சியா திருப்பிவிட்ட போர் வீரர்கள், சமாரியாமுதல் பெத்தொரோன்வரை உள்ள யூதா பட்டணங்களைத் தாக்கி, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாகக் கொள்ளையிட்டார்கள்.

14 அமத்சியா ஏதோமியர்களை முறியடித்து, சேயீர் மக்களின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு. அவன் அவைகளைத் தனக்கு தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்கு தூபம் காட்டினான். 15 அப்பொழுது, யெகோவா அமத்சியாவின்மேல் கோபப்பட்டு, அவனிடத்திற்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் மக்களை உமது கைக்குத் தப்புவிக்காமற்போன மக்களின் தெய்வங்களை நீர் ஏன் நம்பவேண்டும் என்றான். 16 தன்னோடு அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதை விட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேட்காமற்போனதால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.

இஸ்ரவேலுடன் அமத்சியாவின் போர் கி.மு. 826

2 இராஜாக்கள் 14:8–14

8 அப்பொழுது அமத்சியா யெகூவின் மகனாகிய யோவாகாசின் மகன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் பிரதிநிதிகளை அனுப்பி: நம்முடைய திறமையைப் பார்ப்போம் வா என்று சொல்லச் சொன்னான். 9 அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக திருமணம் செய்துகொடு என்று சொல்லச்சொன்னது; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழியே ஓடும்போது அந்த முட்செடியை மிதித்துப்போட்டது. 10 நீ ஏதோமியர்களை முறியடித்ததால் உன் இருதயம் உன்னைக் கர்வமடையச்செய்தது; நீ பெருமை பாராட்டிக்கொண்டு உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடேகூட யூதாவும் விழும்படி, பொல்லாப்பை ஏன் வருவித்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லச்சொன்னான். 11 ஆனாலும் அமத்சியா கேட்காமல்போனான்; ஆகையால், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலுள்ள பெத்ஷிமேசிலே அவனும், யூதாவின் ராஜா அமத்சியாவும், தங்கள் திறமையைப் பார்க்கிறபோது, 12 யூதா மக்கள் இஸ்ரவேலருக்கு முன்பாகத் தோற்று அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். 13 அகசியாவின் மகனாகிய யோவாசின் மகன் அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவையோ, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் பெத்ஷிமேசிலே பிடித்து, எருசலேமுக்கு வந்து, எருசலேமின் மதிலிலே எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலைவாசல்வரை நானூறு முழ நீளம் இடித்துப்போட்டு, 14 யெகோவாவுடைய ஆலயத்திலும் ராஜாவுடைய அரண்மனைப் பொக்கிஷங்களிலும் கிடைத்த பொன் வெள்ளி அனைத்தையும், சகல பணிமுட்டுகளையும், பிணைக்கைதிகளையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.