அப்சலோமின் கிளர்ச்சி (continued)
கி.மு. 1027
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
1 யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்;
நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.
2 உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து,
என்னைக் காத்தருளும்;
உமது செவியை எனக்குச் சாய்த்து,
என்னைக் காப்பாற்றும்.
3 நான் எப்பொழுதும் வந்தடையக்கூடிய கன்மலையாக இரும்;
என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே;
நீரே என்னுடைய கன்மலையும் என்னுடைய கோட்டையுமாக இருக்கிறீர்.
4 என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும்,
நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.
5 யெகோவா ஆண்டவரே, நீரே என்னுடைய நோக்கமும்,
என்னுடைய சிறுவயது தொடங்கி என்னுடைய நம்பிக்கையுமாக இருக்கிறீர்.
6 நான் கர்ப்பத்தில் உருவானதுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்;
என்னுடைய தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே;
உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.
7 அநேகருக்கு நான் ஒரு புதுமைபோலானேன்;
நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாக இருக்கிறீர்.
8 என்னுடைய வாய் உமது துதியினாலும்,
நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.
9 முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும்,
என்னுடைய பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.
10 என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகப் பேசி,
என்னுடைய ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஒன்றாக ஆலோசனைசெய்து:
11 தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்;
அவனை விடுவிப்பவர்கள் இல்லை என்கிறார்கள்.
12 தேவனே, எனக்குத் தூரமாக இருக்க வேண்டாம்;
என் தேவனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்.
13 என்னுடைய ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும்,
எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் வெட்கத்தாலும் மூடப்படவும் வேண்டும்.
14 நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து,
மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
15 என்னுடைய வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்;
அவைகளின் தொகையை நான் அறியவில்லை.
16 யெகோவா ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்;
உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.
17 தேவனே, என்னுடைய சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்;
இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.
18 இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது பெலனையும்,
வரப்போகிற எல்லோருக்கும் உமது வல்லமையையும் நான் அறிவிக்கும்வரை,
முதிர்வயதும் நரைமுடியும் உள்ளவனாகும்வரை என்னைக் கைவிடாமல் இருப்பீராக.
19 தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது,
பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்?
20 அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து,
திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறச்செய்வீர்.
21 என்னுடைய மேன்மையைப் பெருகச்செய்து,
என்னை மறுபடியும் தேற்றுவீர்.
22 என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்;
இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன்.
23 நான் பாடும்போது என்னுடைய உதடுகளும்,
நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
24 எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி குழம்பினபடியால்,
நாள்தோறும் என்னுடைய நாவு உமது நீதியைக் கொண்டாடும்.
1 தாவீது தன்னோடு இருந்த மக்களைக் கணக்கிட்டுப்பார்த்து, அவர்கள்மேல் 1,000 பேருக்கு தலைவர்களையும், 100 பேருக்கு தலைவர்களையும் ஏற்படுத்தி, 2 பின்பு தாவீது படைகளில் மூன்றில் ஒரு பிரிவை யோவாபின் கையிலும், மூன்றில் ஒரு பிரிவைச் செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் கையிலும், மூன்றில் ஒரு பிரிவைக் கித்தியனான ஈத்தாயின் கையிலுமாக அனுப்பி: நானும் உங்களோடு புறப்பட்டு வருவேன் என்று ராஜா இராணுவங்களுக்குச் சொன்னான். 3 மக்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் ஓடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் இறந்துபோனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பத்தாயிரம்பேருக்கு சமமானவர்; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவி செய்கிறது எங்களுக்கு நலமாக இருக்கும் என்றார்கள். 4 அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாகத் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா நகர வாசலின் ஓரத்திலே நின்றான்; மக்கள் எல்லோரும் நூறு நூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள். 5 ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: வாலிபனான அப்சலோமை எனக்காக மெதுவாக நடத்துங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக் குறித்து தலைவர்களுக்கெல்லாம் கட்டளையிட்டதை மக்கள் எல்லோரும் கேட்டிருந்தார்கள். 6 மக்கள் வெளியே இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் புறப்பட்டபின்பு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது. 7 அங்கே இஸ்ரவேல் மக்கள் தாவீதின் வீரர்களுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டார்கள்; அங்கே அந்த நாளிலே இருபதாயிரம்பேர் சாகத்தக்கதாக பேரழிவு உண்டானது. 8 யுத்தம் அந்த தேசம் எங்கும் பரவியது; அந்த நாளில் பட்டயத்தால் இறந்த மக்களைவிட, காடு பட்சித்துப்போட்ட மக்கள் அதிகம். 9 அப்சலோம் தாவீதின் வீரர்களை சந்திக்க நேர்ந்தது; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின்கீழ் வந்ததினால், அவனுடைய தலை கர்வாலி மரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்திற்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை தள்ளிப்போனது. 10 அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலி மரத்திலே தொங்குவதைப் பார்த்தேன் என்றான். 11 அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி: நீ அதைப் பார்த்தாயே; பின்பு ஏன் அவனை அங்கேயே வெட்டி, நிலத்தில் விழும்படி செய்யவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக்காசையும் ஒரு வாரையும் கொடுக்கக் கடமையுள்ளவனாக இருப்பேனே என்றான். 12 அந்த மனிதன் யோவாபை நோக்கி: என்னுடைய கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய மகன்மேல் என்னுடைய கையை நீட்டமாட்டேன்; வாலிபனான அப்சலோமை நீங்களே காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள் கேட்கக் கட்டளையிட்டாரே. 13 ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவானது இல்லை; ஆதலால், நான் அதைச்செய்தால், என்னுடைய உயிருக்கே எதிராக செய்பவனாவேன், நீரும் எனக்கு எதிராக இருப்பீர் என்றான். 14 பின்பு யோவாப்: நான் இப்படி உன்னோடு பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன்னுடைய கையிலே மூன்று ஈட்டிகளை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலி மரத்தின் நடுவிலே உயிரோடு தொங்கிக்கொண்டிருக்கும்போது, அவனுடைய மார்பிலே குத்தினான். 15 அப்பொழுது யோவாபின் ஆயுதம் ஏந்தினவர்களான பத்து வீரர்கள் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்று போட்டார்கள். 16 அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி இராணுவத்தை நிறுத்தியதால், இராணுவம் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பினார்கள். 17 அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மிகப் பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அவரவர் தங்கள் வீடுகளுக்கு ஓடிப்போனார்கள். 18 அப்சலோம் உயிரோடு இருக்கும்போது: என்னுடைய பெயரை நினைக்கச்செய்யும்படியாக எனக்கு மகன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன்னுடைய பெயரை சூட்டினான்; அது இந்த நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.
19 சாதோக்கின் மகனான அகிமாஸ்: யெகோவா ராஜாவை அவர்களுடைய எதிரிகளின் கைக்கு விலக்கி நியாயம் செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் வேகமாக ஓடட்டும் என்றான். 20 யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக்கூடாது; இன்னொரு நாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் மகன் இறந்ததால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி, 21 யோவாப் கூஷியை நோக்கி: நீ போய், பார்த்ததை ராஜாவுக்கு அறிவிப்பாயாக என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான். 22 சாதோக்கின் மகனான அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பின்பாக நானும் ஓடுகிறேன் என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கும்போது, நீ ஓடவேண்டியது என்ன என்றான். 23 அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமவெளி நிலத்தின் வழியாக ஓடி கூஷிக்கு முந்திப்போனான். 24 தாவீது உள் மற்றும் வெளி வாசலின் நடுவாக உட்கார்ந்திருந்தான்; இரவு காவலன் மதில் வாசலின் மேற்கூரையின்மேல் நடந்து, தன்னுடைய கண்களை உயர்த்தி, இதோ, ஒரு மனிதன் தனியே ஓடிவருகிறதைப் பார்த்து, 25 கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான். அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாக வந்தால், அவனுடைய வாயிலே நல்ல செய்தி இருக்கும் என்றான்; அவன் அருகே ஓடிவரும்போது, 26 இரவு காவலன், வேறொருவன் ஓடிவருகிறதைப் பார்த்து: அதோ இன்னொரு மனிதன் தனியே ஓடிவருகிறான் என்று வாயிற்காவலனைக் கூப்பிட்டுச் சொன்னான்; அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான். 27 மேலும் இரவு காவலன்; முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனிதன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான். 28 அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவான என்னுடைய ஆண்டவனுக்கு எதிராகத் தங்கள் கைகளை எடுத்த மனிதர்களை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனான யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான். 29 அப்பொழுது ராஜா: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரனையும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒரு பெரிய குழப்பம் இருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான். 30 அப்பொழுது ராஜா: நீ அங்கே போய் நில் என்றான்; அவன் ஒரு பக்கத்தில் போய் நின்றான். 31 இதோ, கூஷி வந்து: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, நற்செய்தி, இன்று யெகோவா உமக்கு எதிராக எழும்பின எல்லோடைய கைக்கும் உம்மை விலக்கி நியாயம் செய்தார் என்றான். 32 அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்த வாலிபனுக்கு நடந்ததுபோல, ராஜாவான என் ஆண்டவனுடைய எதிரிகளுக்கும், தீங்கு செய்ய உமக்கு விரோதமாக எழும்புகிற யாவருக்கும் நடக்கட்டும் என்றான். 33 அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, நகர வாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகும்போது: என் மகனான அப்சலோமே, என் மகனே, என் மகனான அப்சலோமே, நான் உனக்குப் பதிலாக இறந்துபோனால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.