ஆபிராமும் லோத்தும் பிரிதல்

கி.மு. 1996

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆதியாகமம் 13:5–13

5 ஆபிராமுடன் வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் ஜனங்களும் இருந்தார்கள். 6 அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க அந்த இடம் அவர்களுக்குப் போதுமனதாக இல்லை; அவர்களுடைய சொத்துக்கள் அதிகமாக இருந்ததால், அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க வசதி இல்லாமற்போனது. 7 ஆபிராமுடைய மேய்ப்பர்களுக்கும் லோத்துடைய மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அந்தக் காலத்தில் கானானியரும் பெரிசியரும் அந்த தேசத்தில் குடியிருந்தார்கள். 8 ஆபிராம் லோத்தை நோக்கி: “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்கள். 9 இந்த தேசமெல்லாம் உனக்குமுன்பாக இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன்” என்றான். 10 அப்பொழுது லோத்து சுற்றிலும் பார்த்து: யோர்தான் நதிக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதும் நீர்வளம் உள்ளதாக இருப்பதைக்கண்டான். யெகோவா சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிவரைக்கும் அது யெகோவாவுடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. 11 அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதையும் தேர்ந்தெடுத்து, கிழக்கே புறப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். 12 ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகிலிருக்கும் சமபூமியிலுள்ள பட்டணங்களில் குடியிருந்து, சோதோமுக்குச் செல்லும் வழியில் கூடாரம் போட்டான். 13 சோதோமின் மக்கள் பொல்லாதவர்களும் யெகோவாவுக்கு முன்பாக மகா பாவிகளுமாக இருந்தார்கள்.

ஆபிராமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் புதுப்பிக்கப்படுதல் கி.மு. 1920

ஆதியாகமம் 13:14–18

14 லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, யெகோவா ஆபிராமை நோக்கி: “உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார். 15 நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படிக் கொடுத்து, 16 உன் சந்ததியை பூமியின் தூளைப்போலப் பெருகச்செய்வேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணுவதற்கு முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணமுடியும். 17 நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எதுவரையோ, அதுவரை நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன்” என்றார். 18 அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமிக்குப் போய் குடியிருந்து, அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

ஐந்து ராஜாக்களுடனான போர் கி.மு. 1912

ஆதியாகமம் 14:1–17

1 சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின் ராஜாவாகிய கெதர்லா கோமேரும், கோயிமின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்; 2 அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம் செய்தார்கள். 3 இவர்கள் எல்லோரும் உப்புக்கடலாகிய சித்தீம் பள்ளத்தாக்கிலே கூடினார்கள். 4 இவர்கள் 12 வருடங்கள் கெதர்லாகோமேரைச் சேவித்து, 13 ஆம் வருடத்திலே கலகம் செய்தார்கள். 5 14 ஆம் வருடத்திலே கெதர்லாகோமேரும், அவனோடு கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும், காமிலே இருந்த சூசிமியரையும், சாவேகீரியத்தாயீமிலே இருந்த ஏமியரையும், 6 சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்திரத்திற்கு அருகிலுள்ள எல்பாரான்வரை தோற்கடித்து, 7 திரும்பிக் காதேஸ் என்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியர்களுடைய நாடு முழுவதையும், ஆசாசோன் தாமாரிலே குடியிருந்த எமோரியரையும் கூட அழித்தார்கள். 8 அப்பொழுது சோதோமின் ராஜாவும், கொமோராவின் ராஜாவும், அத்மாவின் ராஜாவும், செபோயீமின் ராஜாவும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவும் புறப்பட்டு சித்தீம் பள்ளத்தாக்கிலே, 9 ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், கோயிமின் ராஜாவாகிய திதியாலோடும், சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்செய்யப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நான்கு ராஜாக்களும் யுத்தம் செய்தார்கள். 10 அந்த சித்தீம் பள்ளத்தாக்கில் நிலக்கீல் உண்டாகும் கிணறுகள் இருந்தன. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் தோற்று ஓடி அங்கே விழுந்தார்கள்; மீதமுள்ளவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள். 11 அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். 12 ஆபிராமின் சகோதரனுடைய மகனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்ததால், அவனையும், அவனுடைய பொருட்களையும் கொண்டுபோய்விட்டார்கள். 13 தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதைத் தெரிவித்தான்; ஆபிராம் தன்னுடன் உடன்படிக்கை செய்திருந்த மனிதர்களாகிய எஸ்கோலுக்கும், ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சமபூமியிலே அப்பொழுது குடியிருந்தான். 14 தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த யுத்தப்பயிற்சி பெற்றவர்களாகிய 318 ஆட்களுக்கும் ஆயுதம் அணிவித்து, தாண் என்னும் ஊர்வரை அவர்களைத் தொடர்ந்துபோய், 15 இரவுநேரத்திலே அவனும், அவனுடைய வேலைக்காரரும் பிரிந்து, குழுக்களாக அவர்கள்மேல் விழுந்து, அவர்களைத் தோற்கடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாவரைத் துரத்தி, 16 அனைத்து பொருட்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருட்களையும், பெண்களையும், மக்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்.

17 அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் தோற்கடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குவரை அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.

மெல்கிசேதேக்கு ஆபிராமை ஆசீர்வதித்தல்

ஆதியாகமம் 14:18–24

18 அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவந்து, 19 அவனை ஆசீர்வதித்து: “வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக. 20 உன் எதிரிகளை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். 21 சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: “மக்களை எனக்குத் தாரும், பொருட்களை நீர் எடுத்துக்கொள்ளும்” என்றான். 22 அதற்கு ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து; “ஆபிராமை செல்வந்தனாக்கினேன் என்று நீர் சொல்லாமலிருக்க நான் ஒரு நூலையாகிலும் காலணியின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் ஒன்றையாகிலும் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று, 23 வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய யெகோவாவுக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன். 24 வாலிபர்கள் சாப்பிட்டதுபோக, என்னுடன் வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே என்னும் மனிதர்களுடைய பங்குமாத்திரமே வரவேண்டும்; இவர்கள் தங்களுடைய பங்குகளை எடுத்துக்கொள்ளட்டும்” என்றான்.