சிறையிருப்புக்குக் காரணமான விக்கிரக வழிபாடுகளைப் பற்றிய ஒரு தரிசனம் (continued)

பாபிலோனியச் சிறையிருப்பை ஏற்படுத்திய விக்கிரக வழிபாடுகளைப் பற்றிய ஒரு தரிசனம்.

கி.மு. 594

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எசேக்கியேல் 10:1–11:21

1 இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திர நீலரத்தினம்போன்ற சிங்காசனத்தைபோல ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது. 2 அவர் சணல்நூல் அங்கி அணிந்திருந்த மனிதனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே நுழைந்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற நெருப்புத்தழலில் உன்னுடைய கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் சிதறலாக வீசு என்றார்; அப்படியே அவன் என்னுடைய கண்காண உள்ளே நுழைந்தான். 3 அந்த மனிதன் உள்ளே நுழையும்போது, கேருபீன்கள் ஆலயத்தின் வலது புறத்தில் நின்றன; ஒரு மேகம் உள்முற்றத்தை நிரப்பிற்று. 4 யெகோவாவுடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, முற்றமும் யெகோவாவுடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று. 5 கேருபீன்களுடைய இறக்கைகளின் இரைச்சல் சர்வத்துக்கும் வல்ல தேவன் பேசும்போது உண்டாகும் சத்தம்போல வெளிமுற்றம்வரை கேட்கப்பட்டது. 6 அவர் சணல்நூல் அங்கி அணிந்திருந்த மனிதனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து நெருப்பை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே நுழைந்து சக்கரங்கள் அருகிலே நின்றான். 7 அப்பொழுது கேருபீன்களுக்குள்ளே ஒரு கேருபீன் தன்னுடைய கையைக் கேருபீன்களின் நடுவில் இருக்கிற நெருப்பில் நீட்டி, அதில் எடுத்து சணல்நூல் அங்கி அணிந்திருந்த மனிதனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தான். 8 கேருபீன்களுடைய இறக்கைகளின்கீழ் மனிதர்களின் கையைப் போல காணப்பட்டது. 9 இதோ, கேருபீன்கள் அருகில் நான்கு சக்கரங்கள் இருக்கக் கண்டேன்; ஒவ்வொரு கேருபீன் அருகில் ஒவ்வொரு சக்கரம் இருந்தது; சக்கரங்களின் தோற்றம் படிகப்பச்சை நிறம்போலிருந்தது. 10 அவைகள் நான்கிற்கும் ஒரே மாதிரியான ரூபம் இருந்தது; சக்கரங்களின் நடுவிலே சக்கரம் இருப்பதுபோல் காணப்பட்டது. 11 அவைகள் ஓடும்போது தங்கள் நான்கு பக்கங்களிலும் ஓடும்; ஓடும்போது அவைகள் திரும்பினதில்லை; தலைப்பார்க்கும் இடத்துக்கே அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடும்போது அவைகள் திரும்பினதில்லை. 12 அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் இறக்கைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன; அவைகள் நான்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன. 13 அந்தச் சக்கரங்களைப் பார்த்து: சக்கரமே என்று ஒருவன் கூப்பிடுகிற சத்தத்தைக் கேட்டேன். 14 ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன; முதலாம் முகம் கேருபீன்முகமும், இரண்டாம் முகம் மனிதமுகமும், மூன்றாம் முகம் சிங்கமுகமும், நான்காம்முகம் கழுகுமுகமுமாக இருந்தது. 15 கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியின் அருகில் கண்ட உயிர். 16 கேருபீன்கள் செல்லும்போது சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; பூமியிலிருந்து எழும்பக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை விரித்தபோது, சக்கரங்களும் அவைகளை விட்டு விலகிப்போகவில்லை. 17 அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் எழும்பும்போது இவைகளும் எழும்பின; உயிருள்ள ஆவி இவைகளில் இருந்தது. 18 யெகோவாவுடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது. 19 அப்பொழுது கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை விரித்து, என்னுடைய கண் காண பூமியைவிட்டு எழும்பின; அவைகள் புறப்படும்போது சக்கரங்களும் அவைகளுக்குச் சரியாகச் சென்றன; யெகோவாவுடைய ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நிற்க, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது. 20 இது நான் கேபார் நதியின் அருகிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த உயிரினம் தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன். 21 அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகமும், நான்கு இறக்கைகளும் இருந்தன; அவைகளுடைய இறக்கைகளின்கீழ் மனித கைளைப் போல இருந்தது. 22 அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியின் அருகிலே கண்ட அந்த முகங்களைப் போல இருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்திற்கு முன்னே இருந்த திசையை நோக்கிச் சென்றது.

11:1 பின்பு தேவ ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் யெகோவாவுடைய ஆலயத்தின் கிழக்கு முகமாக இருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து ஆண்கள் இருந்தார்கள்; அவர்களின் நடுவே மக்களின் பிரபுக்களாகிய அசூரின் மகனாகிய யசனியாவையும், பெனாயாவின் மகனாகிய பெலத்தியாவையும் கண்டேன். 2 அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, தீய ஆலோசனை சொல்லுகிற மனிதர்கள். 3 இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள். 4 ஆகையால் அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம்சொல்லு, மனிதகுமாரனே, தீர்க்கதரிசனம்சொல்லு என்றார். 5 அப்பொழுது யெகோவாவுடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் மக்களே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்களுடைய மனதில் எழும்புகிறதை நான் அறிவேன். 6 இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள்; அதின் வீதிகளைக் கொலை செய்யப்பட்டவர்களாலே நிரப்பினீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார். 7 ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவிலே போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இல்லாதபடிக்குப் வெளியேற்றுவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 8 பட்டயத்திற்குப் பயப்பட்டீர்கள், வாளையே உங்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 9 நான் உங்களை அதற்குள் இல்லாதபடிக்குப் வெளியேற்றி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன். 10 பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள். 11 இந்த நகரம் உங்களுக்குப் பானையாக இருப்பதுமில்லை நீங்கள் அதிலுள்ள இறைச்சியாக இருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன். 12 என்னுடைய கட்டளையின்படி நடக்காமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார். 13 நான் இப்படித் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, பெனாயாவின் மகனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாக: ஆ, யெகோவாகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களை முற்றிலும் அழித்துப்போடுவீரோ என்று முறையிட்டேன். 14 அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 15 மனிதகுமாரனே, நீங்கள் யெகோவாவைவிட்டுத் தூரமாகப்போங்கள், எங்களுக்கு இந்த தேசம் சொந்தமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன்னுடைய சகோதரர்களுக்கும், உன்னுடைய குடும்பத்தாருக்கும், உன்னுடைய சொந்த மக்களுக்கும், இஸ்ரவேலர்கள் அனைவருக்கும், எருசலேமின் வாழ்கிறவர்கள் சொல்லுகிறார்கள்.

16 ஆகையால் நான் அவர்களைத் தூரமாக அந்நியஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களைத் தேசங்களிலே சிதறடித்திருந்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்சகாலத்திற்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல். 17 ஆதலால் நான் உங்களை மக்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு. 18 அவர்கள் அங்கே வந்து, அதில் சீ என்று வெறுக்கப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாக இருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள். 19 அவர்கள் என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஒருமனப்பட்ட இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் சரீரத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன். 20 அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள், நான் அவர்கள் தேவனாக இருப்பேன். 21 ஆனாலும் சீ என்று வெறுக்கப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்களுடைய இருதயத்தின் ஆசையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமத்துவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.