இயேசுவை ராஜாவாக்கும் திட்டம் தடுக்கப்படுகிறது

இயேசுவை ராஜாவாக (ஓர் அரசியல் மேசியாவாக) அறிவிக்கும் புரட்சித் திட்டம் தடுக்கப்படுகிறது.

கி.பி. 29 அல்லது 28

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மத்தேயு 14:22–23

14:22 இயேசு மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

23 அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, தனித்து ஜெபம்செய்ய ஒரு மலையின்மேல் ஏறி, மாலைநேரமானபோது அங்கே தனிமையாக இருந்தார்.

மாற்கு 6:45–46

6:45 அவர் மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவிற்கு, தமக்கு முன்பே போகச்சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.

46 அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, ஜெபம்பண்ணுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்.

யோவான் 6:14–15

6:14 இயேசு செய்த அற்புதத்தை அந்த மனிதர்கள் பார்த்து: உண்மையாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.

15 ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாக இருக்கிறார்கள் என்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.

கிறிஸ்து தண்ணீரின்மேல் பன்னிருவரிடம் வருகிறார்

கடலில் புயலால் பன்னிருவரும் ஆபத்தில் இருக்கிறார்கள்; இருளில் கிறிஸ்து தண்ணீரின்மேல் அவர்களிடம் வருகிறார்.

மத்தேயு 14:24–33

14:24 அதற்குள்ளாகப் படகு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் தள்ளாடியது.

25 அதிகாலையிலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.

26 அவர் கடலின்மேல் நடக்கிறதை சீடர்கள் கண்டு, கலக்கமடைந்து, பிசாசு என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். 27 உடனே இயேசு அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார். 28 பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே! நீரேயானால் நான் தண்ணீரின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். 29 அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படகைவிட்டு இறங்கி, இயேசுவினிடத்தில் போகத் தண்ணீரின்மேல் நடந்தான். 30 காற்று பலமாக இருக்கிறதைக் கண்டு, பயந்து, மூழ்கும்போது: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். 31 உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: விசுவாசக் குறைவுள்ளவனே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.

32 அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. 33 அப்பொழுது, படகில் உள்ளவர்கள் வந்து: உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

மாற்கு 6:47–52

6:47 மாலைநேரமானபோது படகு நடுக்கடலில் இருந்தது; அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.

48 அப்பொழுது எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்ததால், அவர்கள் கஷ்டப்பட்டு துடுப்பு போடுகிறதை அவர் பார்த்து, அதிகாலையில் கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல காணப்பட்டார்.

49 அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் பார்த்து, அவரை பிசாசு என்று நினைத்து, சத்தமிட்டு அலறினார்கள். 50 அவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து கலக்கம் அடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமல் இருங்கள் என்று சொல்லி.

51 அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமைதியானது; எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். 52 அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாக இருந்ததினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமல் போனார்கள்.

யோவான் 6:16–21

6:16 மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய்,

17 படகில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராக போனார்கள்; அப்பொழுது இருட்டாக இருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார். 18 பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.

19 அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் படகில் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படகின் அருகில் வருகிறதைப் பார்த்து பயந்தார்கள். 20 அவர்களை அவர் பார்த்து: நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார்.

21 அப்பொழுது அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விருப்பமானார்கள்; உடனே படகு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.

கெனேசரேத்தில் இயேசு வரவேற்கப்படுகிறார்

மத்தேயு 14:34–36

14:34 பின்பு, அவர்கள் கடலைக்கடந்து, கெனேசரேத்து நாட்டிற்கு வந்தார்கள்.

35 அந்த இடத்து மனிதர்கள் அவரை யார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, வியாதியுள்ளவர்கள் எல்லோரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, 36 அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட எல்லோரும் குணமானார்கள்.

மாற்கு 6:53–56

6:53 அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து என்னும் நாட்டிற்கு வந்து, கரை ஏறினார்கள். 54 அவர்கள் படகில் இருந்து இறங்கினவுடனே, மக்கள் அவரை அறிந்து, 55 அந்தச் சுற்றுபுறமெல்லாம் ஓடிச்சென்று, நோயாளிகளைப் படுக்கைகளில் படுக்கவைத்து, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்துகொண்டுவந்தார்கள்;

56 இவைகள் இல்லாமல், அவர் சென்ற கிராமங்கள், பட்டணங்கள், நாடுகள் எல்லாவற்றிலும் சந்தைவெளிகளிலே நோயாளிகளைக் கொண்டுவந்து, அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட எல்லோரும் சுகம் பெற்றுக்கொண்டார்கள்.